User blogs

Reporter
இங்கிலாந்து மக்கள்தொகையில் அதிக வெளிநாட்டினர் இந்தியர்கள்

லண்டனில் தேசிய அளவிலான புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. அதில், ஒட்டுமொத்த இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் சீனர்கள், அமெரிக்கர்களை விட இரண்டு மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு வங்கதேசம், ஜெர்மன், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

2004-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் சுமார் 7.6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கடுத்ததாக பாகிஸ்தானியர்கள் (5.16 லட்சம்) ஐயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் (3.78 லட்சம்), ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் (2.97 லட்சம்), வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் 2.28 லட்சம் பேரும் வாழ்ந்து வருகின்றனர். 

தற்போது இங்கிலாந்து நாட்டில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2.2 லட்சம் பேரும், 1.97 லட்சம் அமெரிக்கர்களும், 1.91 லட்சம் சீனர்களும், 1.85 லட்சம் நைஜீரியர்களும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பிரதமர் கடந்த 2010-ம் ஆண்டிற்கு பிறகு 3 முறை இந்தியாவுக்கு வந்திருப்பது இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.

Reporter Jul 4 '15
Reporter
இஸ்ரோவின் மிகப்பெரிய முயற்சி; வரும் ஜூலை 10-ந்தேதி PSLV-C28 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது

வரும் ஜூலை 10-ந்தேதி PSLV-C28 ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துகிறது. 

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட வர்த்தக ரீதியில் ஏவப்படும் ராக்கெட்டாக இது கருதப்படுகிறது. இந்த 5 வெளிநாட்டு செயற்கைகோள்களும்  மொத்தம் 1,440 கிலோ எடை கொண்டதாகும். 

13-வது விண்கலமாக ஏவப்படும் PSLV-C28 ராக்கெட் ஒரே மாதிரியான 3, DMC3 ஆப்டிக்கல் எர்த் அப்சர்வேசன் சாட்டிலைட்டுகளை சுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தின் எஸ்.எஸ்.டி.எல் நிறுவனம் தயாரித்தது ஆகும். 447 கிலோ கொண்ட இந்த 3 செயற்கைக்கோள்களும் சுமார் 647 கிலோ மீட்டர் தொலைவுள்ள சன் சின்க்ரனஸ் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. 

Reporter Jul 4 '15
Reporter
நகரங்களில் காடுகளை வளர்க்கும் திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு

மும்பை, 


நகரங்களில் காடுகளை வளர்க்கும் 'urban forest' எனும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் நகரங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முறையாக மரங்கள் அடர்த்தி இல்லாத இடங்கள்  கண்டறியப்பட்டு அங்கு மரக்கன்றுகள் நடப்படும். 

இதுபற்றி செய்தியாளர்களுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டி பின்வருமாறு:- 

முனிசிபல் கார்ப்பரேஷன்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட நகரங்கள் நாடு முழுவதும் உள்ளன. அவைகளில் வனத்துறைக்கு ஏற்ற இடங்களாக பல இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அது மாதிரியான இடங்களில் மரங்களின் அடர்த்தி மிகக்குறைவாக உள்ளன. சில இடங்களில் மரங்களே காணப்படுவது இல்லை. எனவே நாங்கள் முனிசிபல் கார்ப்பரேஷன்களின் உதவியோடும், மாநில அரசுகளின் உதவியோடும் அந்த இடங்களில் மரங்களை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். 

இன்றைக்கு நகரங்களில் நிறைய தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், காடுகள் இல்லை. மும்பையிலாவது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. ஆனால், பல நகரங்களில் இதுவும் கிடையாது. மாங்குரோவ் காடுகள் கடலோர பரப்பின் இயற்கையான பகுதி. அதனால்தான், நகர மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளும் போது மாநில அரசுகள் ஒருமுறைக்கு இருமுறை அவைகளின் பாதிப்பு குறித்து அறிக்கை கேட்கின்றன. ஏற்கனவே, 500 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் பூங்காக்களை உருவாக்க மராட்டிய முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளேன். 

இத்திட்டத்தின் ஒருபகுதியாக பள்ளிகளில் மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு தயாராக உள்ளது. ஒரு பள்ளியில் 5,6,7 என 3 வகுப்புகளிலும் 500 மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆளுக்கு ஒரு மரக்கன்றை நட்டாலும் கூட 500 மரக்கன்றுகள் நடப்பட்டுவிடும். இந்த மரக்கன்றுகளுக்கு விதைகளை நட்டது முதல் ஒரு ஆண்டு வரை பராமரிப்பது அந்த மாணவர்களின் கடமையாகும். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கையை பற்றிய கல்வியை வழங்க முடியும். 

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 
Reporter Jul 4 '15
Reporter
ஆம் ஆத்மி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது; பாரதீய ஜனதா கட்சி விமர்சனம்புதுடெல்லி, 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது என பா.ஜ.க. விமர்சித்துள்ளது. 

இதுபற்றி டெல்லியின் புதிய பா.ஜ.க. பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஷியாம் ஜாஜூ பேசியவை பின்வருமாறு:- 

ஆம் ஆத்மி அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பதவியேற்றது முதல் நீண்ட நாட்களாக வெற்று குற்றச்சாட்டுகளையே கணைகளாக தொடுத்து வருவதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுவிட்டார்கள். வளர்ச்சிக்கு குற்றச்சாட்டுகள் தேவையில்லை. தொலைநோக்கு பார்வையும், செயல்படுத்தும் திறமையுமே வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். 

ஆம் ஆத்மியின் நம்பகத்தன்மை முடிவுக்கு வந்துவிட்டது. மக்களின் நம்பிக்கை அனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டு விட்டன. விளம்பரத்திற்காக ரூ.520 கோடியை ஒதுக்கியுள்ள ஆம் ஆத்மி அரசின் செயல்பாடு சரியானதல்ல. எந்த ஒரு முதல்வரும் இந்த அளவுக்கு வர்த்தக ரீதியில் பெரும் பணத்தை செலவு செய்ததில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் மின்சார கட்டணங்களும் புதிய சாதனையை படைத்திருக்கின்றன. 

இதுவரை அவர்கள் சொல்லிக் கொண்டு வந்த எளிமை என்ற சொல் மறைந்தே விட்டது. அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க தவறிவிட்டார்கள். டெல்லியில் பா.ஜ.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அண்மையில் சுமார் 30 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். 

இவ்வாறு அவர் பேசினார்.
Reporter Jul 4 '15
Reporter
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை இணைப்பது குறித்து இன்னும் 5 மாதங்களில் முடிவெடுக்கப்படும்: மத்திய அரசு தகவல்புதுடெல்லி, 

அரசு பொதுத்துறை டெலிகாம் நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது குறித்து இன்னும் 4-5 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என தொலைதொடர்பு துறை செயலாளர் ராகேஷ் கார்க் தெரிவித்துள்ளார். 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.4,459 கோடியும், எம்.டி.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.14,120 கோடியும் கடன் இருப்பதாக மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஐ.டி. துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இந்த காலக்கெடு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்டது. 

எம்.டி.என்.எல். நிறுவனம் டெல்லி மற்றும் மும்பையில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதுமுள்ள மற்ற இடங்களில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. மொபைல் போன்களின் டவர் போர்ட்போலியோவில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 61,622 டவர்களுடன் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Reporter Jul 4 '15
Reporter
ஆங்கிலேயராக இருக்காதீர்கள்; முதலில் இந்தியனாக இருங்கள்; மாணவர்களுக்கு ராஜ்நாத்சிங் அறிவுரைநோய்டா,

நோய்டாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவர்களுக்கு இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றியவை பின்வருமாறு:- 

பெரும்பாலானவர்கள் நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் என்றே கருதுகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. என்னைப் பொறுத்த வரை ஆங்கிலத்தை வெறுக்க வேண்டும் என நான் சொல்லமாட்டேன். ஆனால், ஒவ்வொரு இந்தியரும் தன் தாய்மொழியின் மீது பெருமை கொள்ள வேண்டும். நான் இந்தியை மட்டும் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மொழியையும் தான் சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களை முறைப்படி அழைப்பதில்லை. மாறாக, 'ஹாய்' என்றும் 'பை' என்றும் பெற்றோர்களுக்கு சைகை காட்டுகின்றனர். பெற்றோர்களின் ஆசியை பெற அவர்களது கால்களை தொட்டு வணங்குவது முக்கியமாகும். அப்படி பெறும் ஆசீர்வாதங்கள் பிள்ளைகளை எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை அடையச் செய்யும். 

ஒருவர் தேவைப்படும் இடங்களில் மட்டுமே ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலேயரை போல வர வேண்டும் என நினைக்கக்கூடாது. முதலில் இந்தியனாக இருக்க வேண்டும். 

இவ்வாறு மாணவர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார்.
Reporter Jul 4 '15
Reporter
பள்ளி அருகே கழிவுநீர் தேக்கம்; கண்மாயில் இல்லை தடுப்புசுவர் :பெரியபேராலி ஊராட்சியில் கேள்விக்குறியான சுகாதாரம்விருதுநகர்: மேற்கூரை சேதமடைந்த நிழற்குடை,கண்மாயை யொட்டி ரோட்டில் தடுப்புச்சுவர் இல்லாததால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கவிழும் அபாயம்,பள்ளி அருகே வாறுகாலில் கழிவுநீர் தேக்கம் என விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி ஊராட்சியில் பாதுகாப்பு, சுகாதாரமானது கேள்விக்குறியாக உள்ளது. பெரிய பேராலி, சின்ன பேராலி ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் ஒன்றியத்தைச்சேர்ந்த இந்த ஊராட்சியில் உள்ள பெரியபேராலி துவக்கப்பள்ளி அருகே வாறுகாலில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

பஸ் நிறுத்த நிழற்குடை சேதடைந்துள்ளது. பெரிய பேராலியில் இருந்து விருதுநகர் செல்லும் ரோட்டில் தடுப்புகள் இல்லாததால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஒருபுறம் கண்மாயிலும், மறுபுறம் வயல்வெளியிலும் விழும் நிலை உள்ளது. வடக்கு காலனியில் சிமென்ட் ரோடு அமைக்கப்படவில்லை. கொசு மருத்து முறையாக அடிக்காததால் கொசுத்தொல்லை அதிகம். இது போன்ற பல பிரச்னைகளுடன் இங்குள்ளோர் தவிக்கின்றனர்.

நாகு:பெரிய பேராலி துவக்கப்பள்ளி அருகே வாறுகாலில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கடியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.

வெள்ளைச்சாமி: பெரியபேராலி பஸ் நிறுத்த நிழற்குடை சேதமடைந்தும் அதை சீரமைக்காது அலட்சியம் காட்டகின்றனர். இங்குள்ள அடிபம்பு பழுதாகி மாதங்கள் பலவாகியும் நடவடிக்கை இல்லை. முறையாக கொசு மருந்து அடித்து, குப்பையை அள்ளுவதோடு,ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

முருகன்: ஊராட்சி அலுவலகம் எதிரே கண்மாய்கரை அருகே அடிபம்பு, போர்வெல் தண்ணீர் தொட்டி செயல்படாததால் குடிநீர் பிரச்னை உள்ளது. ரோடு வசதி முறையாக இல்லை. விருதுநகர் ரோட்டில் கண்மாயையொட்டி தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் நிலைதடுமாறி கண்மாய்க்குள் விழுகின்றன.

சீனிராஜ்: பெரிய பேராலியில் வாறுகால்களை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும். மழைக்காலத்திற்குள்ளாக கண்மாயை தூர்வாரி மதகுகளை சீர்செய்ய வேண்டும். . ரோடு வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னையில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜக்கம்மாள் ( ஊராட்சித்தலைவர்): ரோடு, கண்மாய்கரை யொட்டி ரோட்டோர தடுப்புகள் அமைக்க ,பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டித்தர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. வாறுகால்கள், குப்பை முறையாக அள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படுகிறது. குடிநீர் பிரச்னையில்லை. அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக மேம்படுத்தி தரப்படும்,என்றார்.

Reporter Jul 4 '15
Reporter
பேராசிரியர் சதீஷ்குமார் மீது விசாரணை: யு.ஜி.சி.க்கு உத்தரவு

புதுடில்லி: டில்லியின் புகழ் பெற்ற செயி்ன் ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார்,40 மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னை பேராசிரியர் சதீஷ்குமார், பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் மாதம் போலீசில் புகார் அளித்தார். கோர்ட்டில் சதீஷ்குமார் ஜாமின் பெற்றார். இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சதீஷ்குமார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழுவிற்கு(யு.ஜி.சி.) உத்தரவிட்டது.

Reporter Jul 4 '15
Reporter
மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியீடு: சாதி சார்ந்த தகவல்கள் இல்லை

கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. சமூக பொருளாதார மற்றும் சாதி வாரியான கணக்கெடுப்பாக இது அமைந்தது. இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. ஆனால் சாதி சார்ந்த விவரங்களை வெளியிடுவதை அரசு தவிர்த்து விட்டது.

சாதிவாரியாக மக்கள்தொகை விவரங்கள் வெளியிடப்படாதது குறித்து செய்தியாளர்கள், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங்கிடம் கேள்வியெழுப்பினர்.

அவர் கூறும்போது, “சாதி வாரி விவரங்கள் இதில் இல்லை. ஆனால், அதனை தேர்தலோடு தொடர்புபடுத்திக் கூறுவது தவறு. மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தலைவரின் முடிவு இது. அவர் மட்டுமே இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பொருளாதார தரவுகளில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அப்போதுதான், நமது திட்டங்கள் யாருக்குத் தேவை என்பதை முடிவு செய்ய முடியும்” என்றார்.

கடந்த 1931-ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில், 24.39 கோடி வீடுகள் உள்ளன. இவற்றில் 17.91 கோடி வீடுகள் கிராமங்களில் உள்ளன. இந்த வீடுகளில் 10.69 கோடி வீடுகள் பின்தங்கியவையாக கருதப்படுகின்றன.

ஊரகப் பகுதியில் உள்ள 5.37 கோடி வீடுகளில் வசிப்பவர்கள் (29.97%) நிலமற்றவர்கள். 2.37 கோடி குடும்பங்கள் ஓர் அறை உள்ள கச்சா வீடுகளில் வசிக்கின்றனர். எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேரந்த 3.86 கோடி குடும்பத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.

ஊரகப் பகுதியில் வசிக்கும் 4.6 கோடி குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதத்தினர் மாதாந்திர ஊதியம் பெறுகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி.க்களும், 3.34 சதவீத எஸ்.டி. பிரிவினரும் வருமான வரி செலுத்துகின்றனர்.

9.16 கோடி குடும்பத்தினர் உடலுழைப்பு தொழிலின் மூலமே வருவாய் ஈட்டுகின்றர். இது 51.14 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக 30.10 சதவீதத்தினர் வேளாண்மை மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். தனியார், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் 2.5 கோடி குடும்பத்தினர் வருவாய் ஈட்டுகின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “1932-க்குப் பிறகு சாதிவாரியான தரவுகளைத் திரட்டியிருக்கிறோம். இது மிக முக்கியமான ஆவணம்.

மத்திய மற்றும் மாநிலங்களில் இருக்கும் அரசுகளுக்கு கொள்கைகளை வகுப்பதற்கு இது முக்கியமாக தேவைப்படும். திட்டங்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதற்கு இது உதவிகரமாக இருக்கும்” என்றார்.

Reporter Jul 4 '15
Reporter
குஜராத் கலவரம்: பிரதமர் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்அகமதாபாத்தில் பயங்கர வன்முறைகள் நிகழ்ந்த நரோடா பாடியா என்ற இடம். | கோப்புப் படம்: ஜனக் படேல்.குஜராத்தில் ஏற்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்துக்கு தமது அரசின் சில தவறான நடவடிக்கைகளே காரணம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக, ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் துலாத் கூறியுள்ள நிலையில், அக்கலவரங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் ஏ.எஸ். துலாத். அவர், வாஜ்பாய் காலத்தில் காஷ்மீர் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் தொடர்பாக துலாத் பேட்டியளித்தார்.

அதில், குஜராத் கலவரத்தை தமது அரசு கையாண்ட விதமும், தங்களின் சில தவறுகளால்தான் கலவரம் ஏற்பட்டது என்பதையும் வாஜ்பாய் வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்தார்.. கந்தஹார் விமானக் கடத்தலின்போது, அமிருதசரஸில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது உடனடி முடிவுகளை எடுக்க யாரும் தயாராக இல்லை” என்பன போன்ற தகவல்களை அவர் கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவரத்துக்காக அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார் கூறியதாவது:

குஜராத் கலவரத்தால்தான் 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக தோற்றது என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதாக துலாத் தெரிவித்துள்ளார். மோடி ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாரத ரத்னா வாஜ்பாயியின் வார்த்தைகளுக்கு நரேந்திர மோடி மதிப்பளிக்கிறாரா? 2002-ம் ஆண்டு நடந்த வெட்கக்கேடானா குஜராத் கலவரங்களுக்கா அவர் தேசத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?

வாஜ்பாயியின் அரசு, ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சயித் சலாவுதீனுடன் தொடர்பில் இருந்திருக்கிறது. அவரது மகனுக்கு மருத்துக் கல்லூரியில் இடம் அளித்திருக்கிறது. இது பாஜகவின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது. அது ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது, பயங்கரவாதிகளுடனும் பயங்கரவாதத்துடனும் சமரசம் செய்துகொள்கிறது. சலாவுதீனும் அவரது இயக்கமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள்.

இச்செயல்பாடுகள் மூலம், பாஜக தேசியவாதம் என்ற முகமூடியை அணிந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. 

காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தில் அமிருதசரஸில் இருந்து விமானம் வெளியேற, இடர்பாடு மேலாண்மைக் குழு அனுமதித்துள்ளது. இவ்விவகாரத்தில் அரசு தோல்வியடைந்ததால், 3 மிக மோசமான தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது. அமிருதசரஸில் இருந்து விமானம் பறப்பதற்கு யார் பொறுப்பேற்பது. அங்கேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், மசூத் அசார் போன்ற தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள், ஏராளமான அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். விமானக் கடத்தல் சம்பவத்தில் அசிரத்தைக்கான விலையைக் கொடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Reporter Jul 4 '15
Pages: «« « ... 3120 3121 3122 3123 3124 ... » »»